‘பசுமை சைதை’ திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையோரம் 5 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடப்பட்டன
மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின்பேரில் பசுமை சைதை திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் 5 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடப்பட்டன.
சென்னை,
‘மரம் வளர்த்தால் தான் நாடு செழுமையடையும். போதிய மழை பெய்யும். மக்களும் வளமாக இருக்கமுடியும்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் வகையில் சைதாப்பேட்டை தொகுதியில் வசிப்பவர்களின் பிறந்தநாளின்போது மரக்கன்றுகளை பாதுகாப்பு வளையத்துடன் நட்டுக்கொடுக்கும் ‘பசுமை சைதை’ திட்டத்தை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் தொடங்கினார்.
சென்னையில் பசுமையை மீட்டெடுக்கும் இந்த சிறப்பு திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் உறுதித்தன்மை மிக்க வேப்பமரம், புங்கை, பூவரசம், அத்தி, நாவல், பனை மற்றும் மாமரத்தின் விதைகள் நடப்படுகின்றன. ‘பசுமை சைதை’ திட்டத்துக்கு சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர்கள் ராஜேஷ், விவேக், ஜெயம் ரவி, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் ஆர்.பாண்டியராஜன், ராஜீமுருகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். நடப்பட்ட மரக்கன்றுகளை நன்றாக வளர்த்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்பட 17 பேருக்கு ‘பசுமை காவலர்’ விருதினை மா.சுப்பிரமணியன் கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி வழங்கி கவுரவித்தார்.
‘பசுமை சைதை’ திட்டத்தின் தொடர் நிகழ்வாக சைதாப்பேட்டை ஆட்டுத்தொட்டி பாலம் அருகே அடையாறு ஆற்றங்கரையோரம் நேற்று 5 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பனை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மா.சுப்பிரமணியன் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ., கவிஞர் சொற்கோ, பகுதி செயலாளர் ரா.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.குணசேகரன், மா.அன்பரசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 7 ஆயிரத்து 501 முதல் 12 ஆயிரத்து 500 வரையிலான பனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.