சின்னமனூர் அருகே விபத்து: மரத்தில் கார் மோதி தீப்பிடித்தது - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்

சின்னமனூர் அருகே மரத்தில் கார் மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-11-02 21:30 GMT
சின்னமனூர்,

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). பெங்களூருவில் தொழில் அதிபராக உள்ளார்.இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் இருந்து கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக காரில் வந்தார். காரை முருகன் ஓட்டினார். இந்த நிலையில் சின்னமனூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில்மோதி தீப்பற்றி எரிந்தது.

இதில் காரில் பயணம் செய்த முருகன், அவரது மனைவி ஜெயந்தி (39), மகன்கள் தினேஷ் (19), ரித்தீஷ் (13) ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இதில் தினேஷ் பல் மருத்துவம் படித்து வருகிறார். இதுகுறித்த தகவலின்பேரில் உத்தமபாளையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் பிடித்த தீயை அணைத்தனர்.

படுகாயமடைந்த 4 பேரும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்