பா.ஜனதா வேட்பாளர் விலகியதற்கு நான் காரணம் இல்லை : முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

ராமநகர் தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பா.ஜனதா வேட்பாளர் விலகியதற்கு நான் காரணம் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-02 00:17 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்லாரி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு தான் பெங்களூருவுக்கு திரும்பினேன். இன்று (நேற்று) காலையில் ராஜ்யோத்சவா தினவிழாவில் கலந்து கொண்டேன். விழா மேடையில் இருந்தபோது தான் ராமநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும், அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. அதுவரை எனக்கு ஒன்றும் தெரியாது.

அவர் போட்டியில் இருந்து விலக நானோ, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்களோ காரணம் இல்லை. ஆனாலும் என் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எனது மனைவி ராமநகர் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தேன். தற்போது பா.ஜனதா வேட்பாளர் விலகி இருந்தாலும், ஜனதாதளம்(எஸ்) தொண்டர்களிடம் எப்போதும் போல் தேர்தல் பணிகளில் ஈடுபடும்படி கூறியுள்ளேன்.

பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவுக்கு செல்கிறார்கள். அவ்வாறு சென்ற பிறகு பா.ஜனதா தலைவர்கள், அவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்து போகிறார்கள். சில ஆசை வார்த்தைகளை கூறி பா.ஜனதாவுக்கு இழுக்கிறார்கள். அதன்பிறகு, பா.ஜனதாவுக்கு செல்பவர்கள், அந்த கட்சிக்கு ஏன் வந்தோம் என்று நினைக்கின்றனர். அப்படி ஒரு நிலைமை தான் ராமநகரை சேர்ந்த எல்.சந்திரசேகருக்கு ஏற்பட்டுள்ளது.

இதே நிலைமை தான் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அவரை பா.ஜனதாவுக்கு இழுக்க, அக்கட்சி தலைவர்கள் ஒற்றை காலில் நின்றனர். தற்போது எஸ்.எம்.கிருஷ்ணாவை பா.ஜனதாவினர் கண்டுகொள்வதே இல்லை. இதுபோல தான் பா.ஜனதாவுக்கு செல்லும் ஒவ்வொருவரின் நிலைமையும் இருக்கிறது. திப்பு ஜெயந்தி உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளில் பா.ஜனதா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்