பா.ஜனதா வேட்பாளரை விலைக்கு வாங்கவில்லை : டி.கே.சுரேஷ் எம்.பி. சொல்கிறார்

பா.ஜனதா வேட்பாளரை விலைக்கு வாங்கவில்லை என்றும், அவரே விரும்பி தான் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார் என்றும் டி.கே.சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-02 00:10 GMT
பெங்களூரு,

ராமநகர் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் எல்.சந்திரசேகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். நேற்று திடீரென்று இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகிய எல்.சந்திரசேகர், நேற்று டி.கே.சுரேஷ் எம்.பி. முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். இதற்கிடையில், மந்திரி டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகிய 2 பேரும் தான் எல்.சந்திரசேகரை பா.ஜனதாவில் சேர்த்ததாகவும், தற்போது அவர்களே பா.ஜனதாவில் இருந்து விலக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் பா.ஜனதா வேட்பாளரான எல்.சந்திரசேகரை விலைக்கு வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து டி.கே.சுரேஷ் எம்.பி.யிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ராமநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட யாரும் இல்லை. அதனால் தான் காங்கிரசை சேர்ந்த எல்.சந்திரசேகரை பா.ஜனதாவுக்கு இழுத்தனர். எல்.சந்திரசேகருக்கு ஆதரவாக எடியூரப்பா உள்ளிட்ட எந்தவொரு பா.ஜனதா தலைவர்களும் பிரசாரம் செய்யவில்லை. எல்.சந்திரசேகரின் தேர்தல் செலவுக்காக யோகேஷ்வர் பணம் செலவு செய்வதாக கூறிவிட்டு, பணம் செலவழிக்க மறுத்துள்ளார். இதனால் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு என்னை சந்தித்து பேச வேண்டும் என்று அவர் கூறினார். அதன்படி, என்னை சந்தித்து பேசினார். அப்போது அவர், பா.ஜனதாவில் சேர்ந்ததால் கிடைத்த கசப்பான சம்பவங்கள் பற்றி தெரிவித்தார். மீண்டும் காங்கிரசில் சேருவதாகவும் கூறினார்.

அதன்படி, காங்கிரசில் சேர்ந்துள்ளார். எல்.சந்திரசேகரே விரும்பி தான் மீண்டும் காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவரை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எல்.சந்திரசேகர் விலகியதால் பா.ஜனதாவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்.சந்திரசேகர் பா.ஜனதாவில் இருந்து விலகுவது முதல்-மந்திரி குமாரசாமிக்கே தெரியாது. இது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். இடைத்தேர்தல் என்றாலே ஒவ்வொரு கட்சியும் சில தந்திரங்களை செய்வார்கள். அந்த தந்திரங்களை தான் செய்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சுரேஷ் எம்.பி. கூறினார்.

மேலும் செய்திகள்