மேலூரில்: டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி
மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.;
மேலூர்,
மேலூர் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் ஹரிணி என்ற சுருதி (வயது 14). இவர் மேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஹரிணிக்கு கடந்த சில வாரங்களாகவே காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அவரை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஹரிணி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இதற்கிடையில் பலியான மாணவி படித்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியை சுற்றி பன்றிகள் வளர்க்கப்படுவதாலும், அங்கு சாக்கடை நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவிகளுக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதேபோன்று மேலூர் நகராட்சி முழுவதும் சுகாதாரமற்ற நிலை உள்ளது. எனவே காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தல், நகரில் திரியும் பன்றிகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.