கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பெண் மர்மச்சாவு : தலைமறைவான டாக்டர் கைது

கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பெண் மர்மச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவான டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-01 23:19 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியை சேர்ந்த பெண் நீத்து சிங் (வயது35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் காய்ச்சலால் அவதி அடைந்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் உறவினர்கள் அவரை அங்குள்ள கிளினிக்கில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண்ணை டாக்டர் அனில்குமார் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரை செய்தார். அங்கு கொண்டு சென்ற சில மணி நேரத்தில் நீத்து சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த அவரின் உறவினர்கள் கிளினிக்கை முற்றுகையிட்டனர். ஆனால் டாக்டர் அனில் குமார் தனது கிளினிக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று நீத்து சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் டாக்டாின் தவறான சிகிச்சையினால் தான் பலியானதாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் டாக்டர் அனில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவான டாக்டர் வேறொரு பகுதியில், மற்றொரு கிளினிக் நடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று டாக்டரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்