குளச்சல் அருகே 3-வது நாளாக சோதனை: தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் காரில் கடத்திய 400 லிட்டர் மண்எண்ணெயும் சிக்கியது

குளச்சல் அருகே 3-வது நாளாக நடத்திய சோதனையில் தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் கடத்திய 400 லிட்டர் மண்எண்ணெயும் சிக்கியது.

Update: 2018-11-01 23:00 GMT
குளச்சல், 

குளச்சல் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக குளச்சல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் 30-ந்தேதி குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியில் போலீசார் சோதனை போட்ட போது ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட வருவாய் அதிகாரிகள் குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் 7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்து, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் தனித்துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கொட்டில்பாடு ரேஷன் கடை பின்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் புதர்களுக்கிடையே சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அங்கு மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. அந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

இதே அதிகாரிகள் கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தினார்கள். உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். அந்த காரில் அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 400 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. மண்எண்ணெயை பறிமுதல் செய்து இனயம் அரசு குடோனில் ஒப்படைத்தனர். கார் கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. பிடிபட்ட மண்எண்ணெய் மற்றும் ரேஷன் அரிசி ஆகியவை கேரளாவுக்கு கடத்த முயன்றதும், அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.

குளச்சல் அருகே மட்டும் கடந்த 3 நாட்களில் மொத்தம் 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்