கோவையில் தொடரும் சம்பவம்: சந்தன மரம் வெட்டி கடத்தல் - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Update: 2018-11-01 22:00 GMT
கோவை, 

கோவையில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை கலெக்டர் பங்களா அருகிலும், போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகிலும் வளர்ந்திருந்த சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. மேலும் சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்திலேயே சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீளமேடு பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு மேலும் ஒரு சந்தனமரம் வெட்டி கடத்திய சம்பவம் நடந்துள்ளது.

கோவை பீளமேடு விமான நிலையம் அருகில் உள்ள பூங்கா நகரில் நேற்றுக்காலை சிலர் நடைபயிற்சி செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோரம் வளர்ந்திருந்த சந்தன மரம் வெட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அங்கு பெரிய சந்தனமரம் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்பகுதி மட்டும் விடப்பட்டிருந்தது. கடத்தல் கும்பல் நேற்று முன்தினம் இரவு சந்தன மரத்தை வெட்டி வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சந்தன மரம் வெட்டப்பட்டால் அதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் வனத்துறையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வெட்டப்பட்ட சந்தனமரம் பொது இடத்தில் அதாவது சாலையோரம் வளர்ந்துள்ளது. எனவே அதை வெட்டியதை யாரும் பார்க்கவில்லை. மேலும் சம்பவ இடத்துக்கு அருகில் விமான நிலையத்துக்கு செல்லும் சாலை இருப்பதால் அங்குள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் சந்தனமர கடத்தல் கும்பலின் உருவங்கள் பதிவாகி இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

கோவையில் பொது இடங்களோ, தனியார் வீடுகளிலோ சந்தன மரங்கள் வளர்ந்திருந்தால் அதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தன மரம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவையில் கடந்த 28-ந் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் வளர்ந்திருந்த சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்றதாக தேனி மாவட்டம் கூடலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வினோத் குமார் (வயது 29) என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கோவையில் மேலும் சில இடங்களில் அவர் சந்தனமரங்களை வெட்டியது தெரியவந்தது. அதன்பேரில் அவர் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்