பிரிந்திருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒன்றாக இணைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் விரைவில் போராட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பேட்டி

பிரிந்திருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒன்றாக இணைகிறது. தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தெரிவித்தார்.

Update: 2018-11-01 22:30 GMT
திருச்சி,

இது தொடர்பாக திருச்சியில் நேற்று அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

ஜாக்டோ ஜியோ அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 ஆக பிரிந்தது. ஜாக்டோ ஜியோவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 2 ஆக உள்ள ஜாக்டோ ஜியோவும் விரைவில் ஒன்றாக இணைகிறது. இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னையில் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

ஜாக்டோ ஜியோ கிராப்பையும், ஜாக்டோ ஜியோவுடன் இணைக்க உள்ளோம். தலைமை செயலக ஊழியர்கள் சங்கமும் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய குழு முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர்களுக்கு 21 மாத சம்பள நிலுவைதொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு நிறைவேற்றுவதாக கூறி நிறைவேற்றவில்லை. சம்பள நிலுவை தொகையும் வழங்கவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இனி அனைத்து போராட்டங்களும் ஒருங்கிணைந்து நடத்தப்படும். கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் ரெங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் சுதாகரன், துணை தலைவர் நீலகண்டன் உள்பட மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2 ஆக பிரிந்த ஜாக்டோ ஜியோவை இணைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்