திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலத்தில் லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் உள்பட 13 பேர் படுகாயம்
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலத்தில் லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.;
திருச்சி,
சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்தது. பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த கருப்பையா (வயது46) ஓட்டிவந்தார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலத்தில் வந்து கொண் டிருந்தது.
அப்போது காரைக்காலில் இருந்து கரூர் மாவட்டம் தோகைமலை நோக்கி ஜிப்சம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் முன்னால் சென்ற லாரியின் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. டிரைவர் கருப்பையா இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். மேலும் முன்பகுதியில் அமர்ந்திருந்த கண்டக்டர் முருகேசன், 11 பயணிகள் படுகாயமடைந்து அபய குரல் எழுப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பஸ்சில் படுகாய மடைந்த கண்டக்டர் மற்றும் 11 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் கருப்பையா இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் தனபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் உபகரணங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றி படுகாயமடைந்த டிரைவர் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த பயணிகளில் புதுக்கோட்டை லூகாஸ், சாந்தி, சிந்துஜா, அருண் உள்பட 11 பேரும் சிகிச்சை பெற்று திரும்பினர். டிரைவர், கண்டக்டர் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு பஸ் டிரைவர் கருப்பையா தூக்க கலக்கத்தில் பஸ்சை ஓட்டியதால் முன்னால் சென்ற லாரி மீது மோதியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலத்தில் நேற்று அதிகாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. விபத்துக்குள்ளான பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது.