தஞ்சை, கும்பகோணத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சை, கும்பகோணத்தில் கிராம உதவியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-01 22:15 GMT
தஞ்சாவூர், 

கிராம உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

வேலை நிறுத்தத்தையொட்டி தஞ்சை-வல்லம் சாலையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க தஞ்சை வட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். பொருளாளர் குமார், வட்ட தலைவர்கள் வடிவேல் (திருவையாறு), மோகன் (ஒரத்தநாடு), சுப்ரமணியன் (பூதலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட தலைவர் தங்கராசு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராசு, பொருளாளர் கோதண்டபாணி, வட்ட செயலாளர் பாஸ்கரன், பொது சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் வட்ட துணை தலைவர் சேவகமூர்த்தி நன்றி கூறினார்.

அதேபோல கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வின்சென்ட், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்