தஞ்சை ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சை ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-01 22:30 GMT
தஞ்சாவூர், 
சத்துணவு ஊழியர் களுக்கு மாத இறுதியிலோ அல்லது முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு, மாத ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி கலெக்டர் அலுவலம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3 நாட்கள் நீடித்தது.

இந்த நிலையில் தஞ்சை ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரி, முன்னாள் செயலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உமா, செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.

மேலும் செய்திகள்