அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ கடல் பசு

அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் 500 கிலோ கடல் பசு சிக்கியது.

Update: 2018-11-01 23:00 GMT
அதிராம்பட்டினம்,
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த கிழதோட்டம் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் ஒரு கடல் பசு சிக்கியது. அந்த கடல் பசுவை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வன காப்பாளர் குருசாமி, வன சரக அலுவலர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீனவர்களுடன் சேர்ந்து கடல் பசுவை வலையில் இருந்து மீட்டனர்.

வலையில் சிக்கியிருந்ததால் கடல் பசு உயிருக்கு போராடியது. இதை தொடர்ந்து இந்திய வனவிலங்கு நிறுவன அதிகாரிகள் மது மகேஷ், ருக்மணி சேகர், கடல்சார் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலாஜி ஆகியோர் கடல் பசுவுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த கடல் பசுவை மீனவர்கள் உதவியுடன் மீண்டும் கடலில் விட்டனர்.

இதுகுறித்து மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளர் குருசாமி கூறியதாவது:-

மீனவர்கள் வலை சிக்கிய கடல் பசு 500 கிலோ எடை கொண்டதாகவும், 10 அடி நீளத்திலும் இருந்தது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200-க்கும் குறைவான கடல் பசுக்களே உள்ளன. இவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், கடல் பசுக்களின் உணவான கடல் புற்களை வளர்க்கவும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. “கடல் பசுக்களின் நண்பர்கள்“ என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்