கமுதியில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு தொடர்பாக 100 பேர் மீது வழக்கு

கமுதி அருகே பசும்பொன்னில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2018-11-01 21:30 GMT
கமுதி,

கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி நடைபெற்ற குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இவர்களை வரவேற்று அந்தந்த கட்சியினர் சார்பில் கமுதியில் இருந்து பசும்பொன் வரையிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான விளம்பர பேனர்கள் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்கள், தென்னாடு மக்கள் கட்சி பேனர்கள் உள்பட ஏராளமான பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்பட ஒன்றிய செயலாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கமுதி போலீசில் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

அதில், அ.ம.மு.க.வை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் அளவில் பிரச்சினை செய்து வரவேற்பு பேனர்களை கிழித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று அ.ம.மு.க.வைச் சேர்ந்த 100 பேர் மீது கமுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல தென்னாடு மக்கள் கட்சி நிறுவன தலைவர் கணேச தேவர் கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் இதுதொடர்பாக புகார் மனு அளித்தார். அதில், பசும்பொன் தேவர் உருவம் பொறித்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதன்பேரில் கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்