சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை: ஓட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை விற்ற ஓட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை சால்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவு பண்டங்கள் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் அந்த ஓட்டல் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பின்னரும் அந்த ஓட்டலில் உணவு பொருட்கள் தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு நடத்த நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செல்வராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் மற்றும் அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு செய்தனர்.
அப்போது உணவு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப் பட்டது. இதையடுத்து உணவு பொருட்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யும்படி ஓட்டலின் உரிமையாளரை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும் சுகாதாரமற்ற உணவு பொருளை விற்றால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஓட்டல் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஆய்வின்போது நகர ஓட்டல் ஸ்வீட்ஸ் ஸ்டால் மற்றும் தேநீர் கடை உரிமையாளர் சங்க தலைவர் முருகையன் உடன் இருந்தார்.