ஆட்டோ டிரைவர் கொலை: வள்ளியூர் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்

ஆட்டோ டிரைவர் கொலையில் தேடப்பட்டு வந்த 2 வாலிபர்கள் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

Update: 2018-11-01 21:45 GMT

வள்ளியூர்,

ஆட்டோ டிரைவர் கொலையில் தேடப்பட்டு வந்த 2 வாலிபர்கள் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

ஆட்டோ டிரைவர் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 35). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் சரக்கு ஆட்டோவில் குடிநீர் கேன்களை ஏற்றி சென்று கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். சம்பவத்தன்று அஞ்சுகிராமம் பஸ் நிலையம் அருகே உள்ள சிதம்பரநகர் பகுதியில் சரக்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு தண்ணீர் கேன்களை இறக்கி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (30) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் தனது வீட்டுக்கு செல்ல சரக்கு ஆட்டோவை ஒதுக்கி நிறுத்தும்படி சுயம்புலிங்கத்திடம் கூறினார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சுயம்புலிங்கம் தான் நிறுத்தி இருந்த சரக்கு ஆட்டோவை எடுக்க பஸ் நிலையம் வழியாக நடந்து சென்றார். அப்போது ஆனந்த், மற்றும் அவருடைய நண்பர் விசுவநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் (23) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் மற்றும் சிவகுமாரை தேடி வந்தனர்.

2 பேர் சரண்

இந்த நிலையில் அந்த 2 பேரும் நேற்று காலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்£ட்டில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர் அந்த 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்