அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-11-01 22:00 GMT

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன் அறிவுறுத்தி உள்ளார்.

அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மூத்த அதிகாரிகள் தலைமையில் சுகாதார துறையினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார்கள். டெங்கு பரவுவதற்கான சாத்திய கூறு இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அறிவுறுத்தல்

அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோஷெரில், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமாரி மற்றும் மருத்துவ அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

நிலவேம்பு கசாயம்

அதன்படி ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க ஓட்டப்பிடாரம் டி.எம்.பி மெக்கவாய் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் அரசு ஆஸ்பத்திரி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் ஜோஷெரில் தலைமையில் பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

அப்போது சித்த மருத்துவ அலுவலர் வசந்தகுமாரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள், பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்