ஆபத்தில் உதவி செய்யும் அற்புதமான திமிங்கலங்கள்!
ஆபத்தான நேரத்தில் திமிங்கலங்கள் உதவி செய்தன.;
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில் திமிங்கல ஆராய்ச்சியாளர் நன் ஹாசர், தன் குழுவினருடன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மிக மிகப் பிரம்மாண்டமான, சுமார் 22 ஆயிரம் கிலோ எடையுடைய ஹம்பேக் திமிங்கலம் ஒன்று வந்தது. அதன் அருகே சென்று, திமிங்கலத்தைத் தட்டிக் கொடுத்தார். பிறகு அவரும் அவருடைய குழுவினரும் திமிங்கலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து படம் பிடித்தார்கள். ‘‘நாங்கள் அனைவரும் திமிங்கலம் மீதே கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம். அப்போது மிகப் பெரிய புலிச்சுறா ஒன்று எங்களை நோக்கி வந்தது. எங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த திமிங்கலம், சுறாவைத் தன் தலையாலும் துடுப்பாலும் வாலாலும் விரட்டியடித்தது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது. டால்பின்களை போன்றே திமிங்கலமும், மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களைப் பாதுகாக்கிறது என்ற உண்மையை இப்போது படம் பிடித்து, நிரூபித்துவிட்டோம். கடந்த 28 ஆண்டுகளாகத் திமிங்கலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறோம். ஆனால் ஒரு திமிங்கலத்தால் நான் காப்பாற்றப்பட்ட இந்தத் தருணம் என் வாழ்க்கையில் மிகவும் அற்புதமானது!’’ என்கிறார் 68 வயது நன் ஹாசர்.