‘எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு இல்லை’ இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாகவும் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும், இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாகவும் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

Update: 2018-10-31 23:15 GMT

மதுரை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதனை தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வந்தனர். பின்னர் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யாரும் மிரட்டவில்லை. அப்படி மிரட்டி இருந்தால் அவர் தவறு செய்துள்ளார் என்று தானே அர்த்தம். 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யமாட்டோம்.

அந்த 18 தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் என 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம். தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்.

ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். ஒருபக்கம் மக்கள் தீர்க்கமாக முடிவு எடுத்து அரசியல் நோக்கர்களை எல்லாம் தாண்டி முடிவெடுத்தார்கள். அதை ஜெயலலிதாவின் தொகுதியிலேயே பிரதிபலித்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி பொதுமக்களின் எண்ணத்தைதான் வாக்காளர்கள் அங்கு எதிரொலித்தார்கள். அந்த முடிவுதான் இடைத்தேர்தல் வரும் 20 தொகுதிகளிலும் எதிரொலிக்குமே தவிர, நாங்கள் அசந்து விட்டோம், தூங்கி விட்டோம் என்று சொல்வது எல்லாம் ‘தரையில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது‘ என்பதை போன்றது.

எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே.நகர் நிலைமைதான் அவர்களுக்கு வரும். ஏற்கனவே தொகுதி, ஒன்றியம், கிளை கழகம் வரை பொறுப்பாளர்களை நியமித்து உள்ளோம்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிக்கு 20 தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது என்பதுதான் மக்கள் எங்களுக்கு தந்த தீபாவளி செய்தி.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தார்கள். பல ஆயிரம் கொடுத்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஜெயக்குமார் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். அவர் ஒரு மண்குதிரை. அவருக்கு பதில் சொல்ல தேவையில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் தென்மாவட்டத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சுமார் 4 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை இலக்கை எட்டினால்தான் பட்டாசு தொழில் பாதிப்பின்றி நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மக்கள் விரோத போக்கு ஆகும்.

பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சரியாக கையாளவில்லை. இனியாவது இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்