மதுகுடிக்க மனைவி பணம் தரமறுப்பு: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

பண்ருட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தரமறுத்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-31 21:45 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே எ.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (40). பழனிசாமி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பழனிசாமி மது குடிக்க செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் தரமறுத்துள்ளார். இதில் மனவேதனையில் இருந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த செல்வி, தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் பழனிசாமியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது பற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்