நாகர்கோவிலில்: மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

நாகர்கோவிலில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டெம்போ டிரைவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

Update: 2018-10-31 21:45 GMT
நாகர்கோவில், 

பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பள்ளி முடிந்ததும் இறச்சகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் வீட்டுக்கு பஸ் ஏறி செல்வது வழக்கம். இதனை சில மாதங்களாக புத்தேரி பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 23) கவனித்து வந்தார். பின்னர் அவர் மாணவியை சந்திப்பதற்காக இறச்சகுளம் பஸ் நிறுத்தத்துக்கு தினமும் வந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் மாணவியிடம் பேச்சு கொடுக்க தொடங்கியுள்ளார். அன்று முதல் அவர், மாணவியிடம் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி வந்ததாக தெரிகிறது.

இதேபோல் கடந்த 29-ந் தேதியும் அவர் பஸ் நிறுத்தத்தில் நின்ற மாணவியை சந்தித்து பேசினார். அப்போது நாளை உன்னை ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் எனது தாயாரை சந்திக்க அழைத்து செல்கிறேன் என்று கூறினார். அதை நம்பி 30-ந் தேதி காலை பள்ளிக்கு செல்வதாகக்கூறி வீட்டில் இருந்து வந்த மாணவியை, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது தாயாரை பார்க்க அழைத்துச் செல்லாமல், நாகர்கோவில் அறுகுவிளையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவருடைய நண்பர் இல்லை. எனவே மாணவி அணிந்திருந்த பள்ளி சீருடையை கழற்றிவிட்டு, சுடிதாரை அணிந்து வருமாறு அவர் கூறியிருக்கிறார். அதன்படி செய்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி சந்தோஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாலை 6 மணி அளவில் மாணவியை இறச்சகுளம் பஸ் நிறுத்தத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு சந்தோஷ்குமார் சென்று விட்டார்.

வீடு திரும்பிய மாணவியிடம், அவருடைய தாயார் நீ பள்ளிக்கு செல்லவில்லை என்று பள்ளியில் இருந்து போன் செய்தார்களே? எங்கு சென்றாய்? என்று கேட்டார். உடனே மாணவி நடந்த சம்பவத்தை கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், அவளை நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தார்.

கைதான சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

மேலும் செய்திகள்