கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியல்

கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-31 23:00 GMT
திருச்சி, 
மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், ஒரு நபருக்கான உணவு செலவீனத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டம், சாலைமறியல் போன்ற போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி, நேற்று கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, சேட் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் கருப்பு சேலை அணிந்திருந்தனர். ஆண்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் மறியலில் ஈடுபட்ட 250 பேரை திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்