காய்ச்சலால் உயிர் இழப்பு ஏற்படுவதை அரசு அனுமதிக்காது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக 1,200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சலால் உயிர் இழப்பு ஏற்படுவதை அரசு அனுமதிக்காது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.;
பூந்தமல்லி,
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நேற்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு முகாமை நடத்தியது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு முகாம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனத்தை தொடங்கி வைத்தார். மேலும் டெங்கு கொசுக்கள் எப்படி உற்பத்தி ஆகிறது? என்பது குறித்து விளக்கப்பட்டது. பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது:–
ஒரு கொசு, நாள் ஒன்றுக்கு 1,500 முட்டைகள் இடும். அதனால் அதனை சாதாரணமாக நினைக்கக்கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் தொடர்பான 5 லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிய பெருமை வணிகர் சங்கங்களையே சாரும்.
காய்ச்சல் வந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகவேண்டும். பல்வேறு உடல் உறுப்புகளை மாற்றி உயிர் பிழைக்க வைக்கும் இந்த தருணத்தில், காய்ச்சலால் உயிர் இழப்பு ஏற்படுவதை அரசு அனுமதிக்காது.
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மருத்துவமனை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். அதற்கான இடத்தை தந்தால் மருத்துவமனை அமைத்து தருகிறோம். அதுவரை தினமும் 2 மருத்துவமுகாம்கள் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க இருக்கிறோம். டெங்கு காய்ச்சலுக்கு அனைத்து அரசு மருத்துவமனையிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளன. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக 1,200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 20 லட்சம் மருந்துகள் தயாராக உள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களையும் பொருட்படுத்தாமல் சிறப்பு மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், தாம்பரம் சென்றார். அங்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
வியாபாரிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கியதுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்த நர்சிங் மாணவிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு காரணமான ‘ஏடிஸ்’ கொசு உற்பத்தி குறித்து கேள்விகள் கேட்டார். அதற்கு சரியாக பதிலளித்தவர்களை பாராட்டினார்.