தேனி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் - மடிக்கணினியை ஒப்படைத்தனர்

தேனி மாவட்டத்தில் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்கள் மடிக்கணினி, சிம்கார்டு ஆகியவற்றை தாலுகா அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.

Update: 2018-10-31 22:15 GMT
தேனி,

வருவாய்த்துறை சார்பில் வருமான சான்று, சாதிச்சான்று உள்பட பல்வேறு சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சான்றிதழ் வழங்கும் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மடிக்கணினிகளை பயன்படுத்த இணையதள இணைப்பு வழங்கப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது சொந்த செலவில் இணையதள இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி அனைத்தும் பழைய மாடல்களாக உள்ளது. இதேபோல் அரசினால் வழங்கப்பட்டுள்ள சிம்கார்டுகள் சிக்னல் கிடைக்காதவையாக உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்துக்கான அடங்கல் சான்றையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி மற்றும் சிம்கார்டுகளை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஒப்படைத்தனர். தேனி மாவட்டத்தில் மொத்தம் 83 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். இதில் 2 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். 80 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டுமே பணிக்கு வந்து இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமர் ஆகியோர் தலைமையில் உத்தமபாளையம் தலைமையிடத்து துணை தாசில்தார் சுருளியிடம் கிராமநிர்வாக அலுவலர்கள் மடிக்கணினி மற்றும் சிம்கார்டுகளை ஒப்படைத்தனர்.

போடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் மடிக்கணினி மற்றும் சிம் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் காரணமாக ஆன்லைன் மூலம் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்காத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் 19-ந்தேதி சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்