பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக சாலை மறியல்: 653 பேர் கைது

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 653 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-31 21:30 GMT
தேனி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில், கடந்த 29-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தோடு சாலை மறியல் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக் கொடையாக ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். உணவு தயாரிப்பு செலவின தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3-வது நாளாக நேற்றும் தேனியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பள்ளிவாசல் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து நேரு சிலை சிக்னல் பகுதியில் மறியல் செய்தனர்.

நேற்றைய போராட்டத்தில் ஊழியர்கள் பலரும் கருப்பு ஆடை அணிந்து பங்கேற்றனர். மறியலின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சங்க நிர்வாகிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நிலவழகன் உள்பட 653 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்