மாவட்டத்தில் அதிக ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ரத்ததானம் வழங்கியவர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி மாவட்ட கலெக்டர், அதிகம் ரத்ததானம் செய்தவர்கள் மற்றும் அமைப்பாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், மருத்துவர்கள் என 33 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- பெரிய அளவில் சிகிச்சை மேற்கொள்ளும் போது கூடுதலாக ரத்தம் தேவைப்படுகிறது. இது தவிர தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விபத்தினால் ரத்த இழப்பு ஏற்பட்டவர்களுக்கும், தீக்காயம் அடைந்தவர்களுக்கும், ரத்த சோகை உள்ளவர்களுக்கும், பிரசவ காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பிற்கும், இதர புற்று நோய்காரர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரத்தம் தேவைப்படுகிறது. நம் உடலில் உள்ள ரத்தம், தேவைப்படுவோருக்கு வழங்க கூடிய ஒரு பரிசு பொருள் போன்றதாகும். நாம் ஒவ்வொரு முறையும் தானமாக கொடுக்கும் ரத்தம் 4 உயிர்களை காக்கும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், டாக்டர் வெண்ணிலா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் அருள், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் நாராயணசாமி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.