பாளையங்கோட்டையில் கார்–மோட்டார் சைக்கிள் மோதல்; அரசு அதிகாரி பலி

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-31 21:30 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

அரசு அதிகாரி 

நெல்லையை அடுத்த சங்கர்நகர் நாராயணன் நகரை சேர்ந்தவர் ராகவன் (வயது 55). இவர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் காலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வாகன காப்பகத்துக்கு வருவார். அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தூத்துக்குடிக்கு பஸ்சில் வேலைக்கு செல்வார்.

இரவு வேலையை முடித்து விட்டு தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் பாளையங்கோட்டை வருவார். அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் நான்கு வழிச்சாலை வழியாக வீட்டுக்கு செல்வார்.

பரிதாப சாவு 

நேற்று முன்தினம் ராகவன் வழக்கம்போல், கே.டி.சி. நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராகவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகவன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்