விதிமுறை மீறி வெளிமாநில விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை அதிகாரி எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வெளிமாநில விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குநர் நாச்சியார் தெரிவித்து உள்ளார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வெளிமாநில விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குநர் நாச்சியார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
வெளிமாநில விதை
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்று விதை விற்கும் விற்பனையாளர்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும், அறிவிக்கை செய்யப்பட்ட பல்வேறு பயிர்களின் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதைகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல வெளி மாநிலங்களிலிருந்து நெல் உள்ளிட்ட விதைகளை விதை விற்பனையாளர்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
சான்று
அவ்வாறு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் விதைகளில் ஒவ்வொரு குவியலுக்கும் விதைச்சட்டத்தில் உள்ளபடி கொள்முதல் பட்டியலுடன், விதை உற்பத்தி செய்யும் மாநிலத்தின் விதைச்சான்று துறையால் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் படிவம்–2 சான்று இணைக்க வேண்டும். விதை குவியல்களில் குவியல் எண்ணும் கொள்முதல் பட்டியலில் உள்ள குவியல் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் விதைகள் சான்று விதைகளாக இருந்தால் உற்பத்தியாளரின் விவர அட்டையும், சான்று அட்டையும் ஒவ்வொரு மூட்டையிலோ அல்லது பையிலோ இணைத்து தைத்து ஈயக்குண்டு கோர்த்து முத்திரையிடப்பட்டு இருக்க வேண்டும்.
விற்பனை தடை
சான்று அட்டையோ உற்பத்தியாளர் அட்டையோ இல்லாமல் இருந்தால் அந்த விதைகள் மீது விற்பனைத் தடை விதிக்கப்படும். மேலும் விவர அட்டையில் அட்டை எண், பயிர், ரகம், நிலை, குவியல் எண், அளவு, ஆய்வு செய்த தேதி, காலாவதி நாள், குறைந்த பட்ச முளைப்புத்திறன், இனத்தூய்மை சதவீதம், பரிந்துரைக்கப்படும் பகுதி, பருவம், உற்பத்தியாளர் முகவரி ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும். இதில் குறைகள் ஏதும் இல்லாமல் விதைச்சட்ட வழிமுறைகளின்படி வெளிமாநில விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்குவிற்க வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டாலோ, விதைச்சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தாலோ விற்பனையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.