லெனோவா கே-5 புரோ, கே-5 எஸ் ஸ்மார்ட்போன் வாட்ச்-எஸ், வாட்ச்-சி அறிமுகம்
சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா, கே-5 புரோ, கே-5 எஸ் என்ற பெயரிலான இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது தவிர வாட்ச்-எஸ் மற்றும் வாட்ச்-சி என்ற பெயரிலான ஸ்மார்ட் வாட்ச்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கே-5 புரோ ஸ்போர்ட்ஸ் ஸ்மார்ட்போன் இரண்டு கேமராக்களைக் கொண்டதாக, 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரியோடு வந்துள்ளது. இது 5.99 அங்குல தொடு திரை கொண்டது. மற்றொரு மாடலான கே-5 எஸ் ஸ்மார்ட்போன் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கே-9 மாடலில் உள்ள அத்தனை சிறம்பம்சங்களையும் கொண்டதாக வந்துள்ளது. கே-5எஸ் மாடல் 4 ஜி.பி. ரேம் வசதி கொண்டது. இரண்டு ஸ்மார்ட் போன்களின் பின்பகுதியில் விரல் ரேகை சென்ஸார் பகுதி உள்ளது. வாட்ச்-எஸ் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சாகும்.
லெனோவா கே-5 புரோ மாடல் விலை ரூ. 10,500 ஆகும். இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. மற்றொன்றில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவக வசதியுடனும் வந்துள்ளது. இதன் விலை ரூ. 11,600 ஆகும். இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதன் விலை ரூ. 13,700 ஆகும். கருப்பு மற்றும் தங்க நிறத்தில் இவை வெளி வந்துள்ளது.
லெனோவா கே-5 எஸ் மாடல் விலை ரூ. 8,400 ஆகும். இது இரண்டு வண்ணங்கள் அதாவது கருப்பு மற்றும் நீல நிறத்தில் வந்துள்ளது. அறிமுக சலுகையாக குறிப்பிட்ட காலம் வரை ரூ. 7,400-க்கு இந்த மாடலை விற்பனை செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இது ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தைக் கொண் டது. இதில் இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. இதன் கேமரா 16 மெகா பிக்ஸெல் மற்றும் 5 மெகா பிக்ஸெல் கொண்டது. இதன் எடை 165 கிராம் ஆகும்.
லெனோவா எஸ் வாட்ச் மற்றும் சி வாட்ச்
லெனோவா ஸ்மார்ட் வாட்ச் பச்சை நிற டிஸ்பிளேயுடன் வந்துள்ளது. இதில் வழக்கமான சென்சார் அதாவது நடக்கும்போது எவ்வளவு தூரம் நடந்தீர்கள் என்பதை கணக்கிடுவது, தூங்கும் நேரம், ஓடிய நேரம், பைக்கில் பயணித்த நேரம் உள்ளிட்ட விவரங்களை அளித்துவிடும். இது நீர்புகா தன்மை கொண்டது. இதற்கு சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை அணிந்து கொண்டு நீந்தலாம். கருப்பு மற்றும் சிவப்பு லெதர் ஸ்டிராப் மாற்றும் வசதியோடு இது வந்துள்ளது. இதன் உத்தேச விலை ரூ. 2,500 ஆகும்.
வாட்ச் சி-யில் 1.3 அங்குல அமோலெட் சதுர வடிவிலான கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே உள்ளது. இதில் கேமரா உள்ளது. இதனால் தொலை தூரத்திலிருந்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். இதில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. குழந்தைகள் இருக்கும் இடம் பள்ளி, வீடு ஆகியவற்றைக் காட்டும். அவசர கால அழைப்புக்கான வசதி, ஸ்பீக்கர், மைக்ரோபோன் ஆகியனவும் இதில் உள்ளன. இதன் எடை 42 கிராம் ஆகும். நீலம் மற்றும் இளஞ் சிவப்பு நிறத்தில் இது வந்துள்ளது. உத்தேச விலை ரூ. 4,200 ஆகும்.