வறட்சி பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வரவேண்டும் : அசோக் சவான் கோரிக்கை

மராட்டியத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வர வேண்டும் என அசோக் சவான் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2018-10-31 00:22 GMT
மும்பை,

மரத்வாடா மண்டலம் வறட்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. வரும் நாட்களில் மேலும் வறட்சி அதிகரிக்கும் நிலை நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள பல தாலுகாக்கள், கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மும்பையில் பர்பானி பகுதியில் நடந்த பிரசாரா கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி “மன் கி பாத்” நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறினார். ஆனால் மரத்வாடாவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தீபாவளியை எப்படி சந்தோஷமாக கொண்டாடுவார்கள்?

மரத்வாடாவில் நிலவும் வறட்சி குறித்த செய்தி தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கவேண்டும். நான், பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தீபாவளியை மரத்வாடா மண்டலத்தில் கொண்டாடவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மேலும் தீபாவளி பரிசாக அவர்களுக்கு சுத்தமான குடிநீர், தடையில்லாத மின்சாரம் உள்ளிட்ட வறட்சி நிவாரணங்களை வழங்கவேண்டும். அவர்களுக்கு இதை விட சிறந்த பரிசாக வேறு ஏதும் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்