கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு 3-ந் தேதி இடைத்தேர்தல்: பிரசாரம் நாளை ஓய்கிறது

கர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பகிரங்க பிரசாரம் நாளை ஓய்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-10-30 23:28 GMT
பெங்களூரு,

சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் போட்டியிட்டுள்ளன. இதையொட்டி இடைத்தேர்தல் களத்தில் 31 வேட்பாளர்கள் உள்ளனர்.

குறிப்பாக சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்- மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவும், பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா ஆகியோரும், பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் சகோதரி சாந்தாவும், காங்கிரஸ் சார்பில் உக்ரப்பாவும், மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடாவும், பா.ஜனதா சார்பில் டாக்டர் சித்தராமையாவும் போட்டியிட் டுள்ளனர்.

அதேபோல் ராமநகர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், பா.ஜனதா சார்பில் காங்கிரசை சேர்ந்த லிங்கப்பா எம்.எல்.சி.யின் மகன் சந்திரசேகரும், ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடாவும், பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னியும் களத்தில் உள்ளனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சிவமொக்காவில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். பல்லாரியில் சித்தராமையா காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவுக்கு வாக்கு சேகரித்தார். அதே போல் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், ஜமகண்டியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை(வியாழக்கிழமை) ஓய்கிறது. அதாவது பகிரங்க பிரசாரத்திற்கு இன்றுடன் சேர்த்து இன்னும் 2 நாட்களே உள்ளன. அதனால் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளை முற்றுகையிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வருகிற 6-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் முடிவு வெளியாகும் நாள் தீபாவளி பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்