‘முத்துராமலிங்க தேவர் வழியை தி.மு.க. பின்பற்றும்’ - மு.க.ஸ்டாலின் பேட்டி

முத்துராமலிங்க தேவர் வழியை தி.மு.க. பின்பற்றும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2018-10-30 23:07 GMT

ராமநாதபுரம்,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலும், அவரது சிலைக்கும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் மற்றும் அவர் மறைந்த நாள் ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்திருக்கக்கூடிய ஒரு பெருமைக்குரிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30–ந்தேதி அவருக்கு தி.மு.க. சார்பில் எங்களுடைய அஞ்சலியை, மரியாதையை செலுத்துகிற அந்தப் பணியை தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

வங்கத்தில் எப்படி நேதாஜி புகழப்படுகிறாரோ அதுபோல், தமிழகத்தில் முத்துராமலிங்க தேவர் புகழப்படக்கூடிய அந்த நிலையை தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசத்தொண்டு, தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு, அரசியல் தொண்டு என எல்லாவற்றிலும் ஒருசேர பயணித்து மக்களுக்காக குரல் கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர். அவருக்கு, இந்த பசும்பொன்னில் நினைவிடத்தை அமைத்துத் தந்தவர் அன்றைக்கு முதல்–அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி.

அதேபோல், பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்ட மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஏறக்குறைய 14 அடி உயரத்தில் சிலை அமைத்து அன்றைக்கு இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியை அழைத்து அந்த சிலை திறப்பு நிகழ்ச்சியினை நடத்தியவர் தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கருணாநிதி. கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் பகுதிகளில் அவருடைய பெயரால் கல்லூரிகள் உருவாக காரணமாக இருந்தவரும் தலைவர் கருணாநிதி தான்.

அதேபோல், தேவர் வாழ்ந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், முக்குலத்தோரில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி.

ஆகவே, எந்த லட்சியத்திற்காக, எந்த கொள்கைக்காக, எந்த உணர்வோடு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்து காட்டியிருக்கிறாரோ அந்த வழியை நிச்சயமாக, உறுதியாக தி.மு.க. பின்பற்றும் என்று இந்த நல்ல நாளிலே நாங்கள் அத்தனை பேரும் உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்