கடுக்காய் வலசை பகுதியில் நீரோடையால் சாலை துண்டிப்பு; கிராம மக்கள் கடும் அவதி

மண்டபம் யூனியன் கடுக்காய்வலசை பகுதியில் நீரோடையால் சாலை துண்டிக்கப்பட்டு நான்கு கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Update: 2018-10-30 23:03 GMT

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கடுக்காய்வலசை கிராமம். இப்பகுதிக்கு ராமேசுவரம் பிரதான சாலையில் இருந்து கடுக்காய் கிராமம், சூரங்காட்டு வலசை, மானாங்குடி, நொச்சியூரணி ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நான்கு கிராமங்களை இணைக்கும் சாலையில் மழைநீர் தேங்கி சுமார் 200 மீட்டருக்கு சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

புதிய சாலை அமைக்கும் பணியின்போது பாலம் அமைத்து சாலை பணியை செய்யாமல் தண்ணீரில் மூழ்கும் நிலையில் புதிய சாலை அமைத்துள்ளனர். இதனால் நீரோடையின் தண்ணீர் வெளியில் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் அளவில் அடுத்த கிராமங்களுக்கு சென்று சுற்றி செல்லும் அவலம் கடந்த 2 மாதமாக தொடர்கிறது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் புதிய பாலம் அமைத்து பொதுமக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கடுக்காய்வலசை பகுதியை சேர்ந்த பத்மநாபன் கூறும்போது, அடிப்படை யோசனை இல்லாமல் இப்பகுதியில் பாலம் அமைக்காமலேயே சாலை அமைத்துள்ளனர். இதன் மூலம் அரசு நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக இப்பகுதிக்கு பாலம் அமைத்து தரவேண்டும் என பல்வேறு அரசு அதிகாரிகளையும், அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே விரைவில் அனைத்து பொதுமக்களையும் திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதேபோல கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ரிசானியாஜமின், இந்த சாலையால் தங்களின் படிப்பு வீணாகி வருவதாகவும், சீருடைகள் தண்ணீரில் நனைந்து பள்ளிக்கு செல்லும் போது அவலமாக உள்ளது என்றும் தெரிவித்ததுடன், அரசு இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்