அ.தி.மு.க.வில் இணைய டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க.வில் இணைய டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-30 23:15 GMT

மதுரை,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: டி.டி.வி.தினகரனை பார்த்து உங்களுக்கு பயம் வந்துவிட்டதாக சொல்கிறாரே?

பதில்: அ.தி.மு.க. தொண்டனுக்கும், நிர்வாகிகளுக்கும் எப்போதுமே பயம் கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி, சில எட்டப்பர்கள் கட்சியை உடைக்க சதி செய்தார்கள். அந்த கருத்தின் அடிப்படையில்தான், சில பேர் பாதை மாறி சென்றிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் கட்சிக்கு வர வேண்டுமென்று அழைப்பு விடுத்தோம். டி.டி.வி.தினகரனுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால், அவர் அ.தி.மு.க.வின் உறுப்பினர் இல்லை.

கேள்வி: சுப்ரீம் கோர்ட்டில் உங்கள் மீது சொன்ன ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீங்கள் தடை ஆணை வாங்கியிருக்கின்றீர்களே? நீங்கள் மடியில் கனமில்லை என்று சொல்லிவிட்டு, ஏன் தடை ஆணை வாங்குகிறீர்கள்?

பதில்: அது பொய் புகார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் நான் சுப்ரீம் கோர்ட்டில் என்னுடைய சார்பாக வக்கீல்களை வைத்து வாதாடினேன். அதன் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை தடை செய்திருக்கிறது. இதை பற்றி தெளிவாக தெரிவித்துவிட்டேன். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. எதிர்க்கட்சியை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி வக்கீல், என் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டதை நான் தெளிவுபடுத்தினேன். அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

கேள்வி: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து அமைச்சர்களும் ஜெயிலுக்குப் போவார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறாரே?

பதில்: அதுவரைக்கும் அவர்களுடைய முன்னாள் அமைச்சர்கள் வெளியில் இருப்பார்களா என்று பாருங்கள். ஏனென்றால், அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். ஏற்கனவே தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வழக்கை மறைப்பதற்காக இப்படிப்பட்ட வழக்கை தொடருவதாக அவர் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

என்ன வழக்கு தொடரப்போகிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே நான் சொன்னேன், மடியிலே கனமில்லை, வழியிலே பயமில்லை, அவர்களுக்குத் தான் பயமிருக்கிறது. ஏற்கனவே, தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தனிகோர்ட்டில் இப்போது விசாரணையில் இருக்கின்றது. அந்த விசாரணையில் கூட முதன் முதலில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினை தான் விசாரித்தார்கள்.

கேள்வி: தடுப்பணைகள் கட்டுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: காவிரி பாசனம் பெறுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஒரு ஒத்த கருத்திருந்தால்தான் அந்தப்பகுதிகளில் அணை கட்ட முடியும். இன்றைக்கு நாம் காவிரியின் குறுக்கே அணை கட்டவேண்டுமென்றால், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவை இசைவை கொடுக்கவேண்டும். இப்பொழுது நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரையே திறக்கமாட்டேன் என்கிறார்கள். அப்படியிருக்கும் பொழுது நாம் அணை கட்ட சம்மதிப்பார்களா? அதுமட்டுமல்லாமல், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஜெயலலிதா இருந்த காலத்திலே பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் முழுவதும் சேமித்து வைக்கப்பட வேண்டுமென்று ஒரு கருத்து நிலவியது.

அந்த அடிப்படையிலே, தமிழக அரசு ஓய்வுப்பெற்ற 6 தலைமை பொறியாளர்களை நியமித்து, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஓடை, நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாகக்கூடாது என்பதற்காக, எந்தெந்த பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டுமென்று அவர்கள் பரிந்துரைக்கின்றார்களோ அந்தந்த பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு தேவையான நீரை அரசு வழங்குவதற்கு, திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. தடுப்பணை கட்டுவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் இன்றைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்றாண்டு காலங்களில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்