2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 350 பேர் கைது
வேலூரில் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.;
வேலூர்,
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், உணவு உண்ணும் மாணவர்களுக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு உணவு மானியத்தை 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 320 பெண்கள் உள்பட 350 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். மறியல் போராட்டத்தை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், லோகநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் குவிந்தனர்.
அவர்கள் ஆஞ்சநேயர் கோவில் அருகில் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சர்வீஸ் சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 300 பெண்கள் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.