சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையம் –வீடுகளில் கலெக்டர் ஆய்வு; டாக்டர்களை கண்டித்ததால் பரபரப்பு

சிவகிரியில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கதிவரன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டு சோதனை செய்தார். மேலும் அவர், டாக்டர்களை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-30 22:23 GMT

சிவகிரி,

சிவகிரி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணியில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அந்தப்பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிவரன் ஆய்வு செய்ய நேற்றுக்காலை சிவகிரிக்கு சென்றார். பின்னர் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்தார். இதைத்தொடர்ந்து சிவகிரி அம்மன் கோவில் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் சென்றார். பின்னர் அந்த வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று பார்வையிட்டார்.

மேலும் அவர், ஒருசில வீடுகளின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு உள்ள தண்ணீர் தொட்டிகளில் டார்ச் லைட் அடித்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்களிடம் வீட்டில் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் கலெக்டர் அந்தப்பகுதியில் குவிந்து கிடந்த டயர்களை அப்புறப்படுத்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சிவகிரி கைகாட்டி பிரிவு பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் டீக்கடைகள், ஓட்டல்களிலும் கலெக்டர் கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கலெக்டர் சென்றார். பின்னர் அவர் சுகாதார நிலைய வளாகத்தை சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை பார்த்தார். அந்த குப்பைத்தொட்டியில் மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகள் குவிந்து கிடந்ததை கண்டார். அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறியதோடு, இதனை அப்புறப்படுத்த தவறிய சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை கண்டித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை நேரில் சந்தித்து சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்து கேட்டு அறிந்தார். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்.

அப்போது மாவட்ட கலெக்டருன், சிவகிரி பேரூராட்சி செயல் அதிகாரி ஈஸ்வரமூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி எழில்சித்தையராஜா, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்