காலமுறை ஊதியம் கேட்டு 2-வது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 727 பேர் கைது
காலமுறை ஊதியம் கேட்டு திண்டுக்கல்லில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 727 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
காலமுறை ஊதியம், காலமுறை ஓய்வூதியம் மற்றும் சத்துணவு மானியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலத்தின் இறுதியில் பஸ்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர், அரசு ஊழியர் சங்க தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த மறியலில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் 727 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும் திண்டுக்கல் விவேகானந்தாநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அங்கு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், மதிய உணவு சரியில்லை என்றும், முறையாக தண்ணீர் வசதி செய்து தரவில்லை என்றும் சத்துணவு ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக போலீசாருக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர்.