ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த நண்பரை கொன்ற என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த நண்பரை கத்தியால் குத்தி கொன்று புதைத்த என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-10-30 22:00 GMT
கடலூர், 

கடலூர் கோண்டூர் டி.என்.சி.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் எழுத்தராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 29).
என்ஜினீயரான இவர் கடலூரில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரும், கடலூர் அண்ணாநகரை சேர்ந்த முரளி மகன் என்ஜினீயர் தினேஷ்(30) என்பவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் கடந்த 1-4-2016 அன்று இரவு தினேஷ் வீட்டில் இருவரும் மது குடித்தனர். அப்போது சதீஷ்குமாரை ஓரினச்சேர்க்கைக்கு இணங்கும்படி தினேஷ் அழைத்தார். ஆனால் இது தப்பு, என்னை தொந்தரவு செய்தால் நண்பர்களிடம் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன் என்று கூறி சதீஷ்குமார் மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தி கொன்றார். பின்னர் வீட்டு தோட்டத்தில் குழிதோண்டி சதீஷ்குமாரின் உடலை புதைத்துவிட்டு, அதன் மேல் தேங்காய்மட்டை, காய்ந்த விறகுகளை போட்டு மறைத்துவிட்டு தினேஷ் சென்னைக்கு சென்று விட்டார்.

இது குறித்து சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேசை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த நண்பரை கத்தியால் குத்தி கொன்ற தினேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,100 அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தீர்ப்பளித்தார். இதையடுத்து தினேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் எல்.என்.புரம் எம்.ஆறுமுகம் ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்