தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்த 250 கிலோ தரமற்ற இனிப்பு, கார வகைகள் பறிமுதல்

சென்னை புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்யப்பட்ட, 250 கிலோ தரமற்ற இனிப்பு, கார வகைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-10-30 23:15 GMT
தாம்பரம்,

தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு மற்றும் கார வகை உணவு பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதை பயன்படுத்தி சில கடைகளில், காலாவதியான மூலப்பொருட்கள் மற்றும் அதிக சாயத்தை கொண்டு இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் இவற்றை சாப்பிடும், மக்களுக்கு அஜீரணம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தற்போது பலகார வகைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், இனிப்பு வகைகள் தரமானதாக இல்லை என உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் வந்தன. இதை தடுக்கும் வகையில், காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில்குமார், விஜயன் ஆகியோர் குன்றத்தூர் மற்றும் பம்மல் பகுதிகளில் உள்ள 12 கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது காலாவதியான 250 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை பம்மல் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காஞ்சீ புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘காலாவதியான உணவு பொருட்கள் தொடர்பாக, 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தீபாவளி பண்டிகைக்காக தனியாக ஆர்டர் எடுத்து இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்து கொடுப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்