பிரேக் பிடிக்காததால் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கம்பம்மெட்டு மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-30 22:00 GMT
கம்பம்,

தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்ல குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாக மலைப்பாதைகள் உள்ளன. கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம், கொண்டை ஊசி வளைவு மாதாகோவில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 26-ந்தேதியில் இருந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக குமுளி, வண்டிப்பெரியார், சபரிமலை ஆகிய இடங்களுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் வழக்கத்துக்கு மாறாக கம்பம்மெட்டு மலைப்பாதையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 32) என்பவர், லாரியில் வெல்லத்தை ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் கட்டப்பனை மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் வெல்லத்தை இறக்கி விட்டு நேற்று அதிகாலை பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கம்பம்மெட்டு மலைப்பாதையில், 8-வது கொண்டை ஊசி வளைவில் லாரி வந்தபோது திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சுப்பிரமணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து காரணமாக மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் மோட்டார் சைக்கிள், ஜீப்புகள் செல்லும் வகையில் சீரமைத்தனர். அதன்பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து 4 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கம்பத்தில் நடந்த வாரச்சந்தைக்கு வந்த கேரள மக்களும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஏலக்காய் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்