காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் 4,860 பேரின் வாகன உரிமம் தற்காலிக ரத்து

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் 4,860 பேரின் வாகன உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2018-10-30 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் நடக்காத வண்ணம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கந்துவட்டி குறித்து புகார் தெரிவித்தால், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டு வாகன விபத்தில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். 440 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு வாகன விபத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். 350 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் இந்த ஆண்டு வாகன விபத்தை தடுக்க, 39 ஆயிரத்து 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4,860 பேரின் வாகன உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு்ள்ளது.

சென்னை ஐகோர்ட்டு வாகன விபத்தை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட்டது. அதையொட்டி காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் கண்டிப்பாக அனைவரும் வாகன விபத்தை தடுக்க ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில், காஞ்சீபுரம், பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத் போன்ற பகுதிகளில், வாகன விபத்தை தடுக்க போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு வேகத்தை குறைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்