இலவச அரிசிக்கான பணத்தை வேறு திட்டத்துக்கு மாற்ற பார்க்கின்றனர்; கவர்னர் கிரண்பெடி கடும் விமர்சனம்

பொய் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது சவாலாக உள்ளது என்றும் இலவச அரிசி திட்டத்துக்கான பணத்தை வேறு காரணங்களுக்காக மாற்றப்பார்க்கின்றனர் என்றும் கவர்னர் கிரண்பெடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2018-10-30 00:19 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பதும் பின்னரும் அமைதியாவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. தற்போது தீபாவளி நெருங்கிவிட்ட வேளையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கவர்னர், முதல்–அமைச்சர் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். சமூக பொறுப்புணர்வு நிதியில் முறைகேடு செய்துள்ளதாக கவர்னர் கிரண்பெடி மீது நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து நடந்து வரும் மோதலில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், இது தொடர்பான உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார். முதல்–அமைச்சர் நாராயணசாமி தயாரா? என்றும் கவர்னர் கிரண்பெடி சவால் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தொடர்பாக கவர்னரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரியில் உண்மை கண்டறியும் முறை தற்போது அவசரமாக தேவைப்படுகிறது. புதுச்சேரியின் நிர்வாகியாக கடந்த 2 ஆண்டுகளாக தினமும் பொய்யுரைகளுக்கு பதிலளிப்பதிலேயே அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. இது மருத்துவ கல்லூரிக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஆரம்பித்ததாக நான் நினைக்கிறேன். அதில் அப்பட்டமாக பொய் சொன்ன சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் பிடித்துவிட்டோம். எங்களிடம் அதற்கு போதுமான சாட்சிகள் உள்ளன. இந்த தவறுகள் சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று அதிக நேரம், பணம் செலவிட்டும் கடும் துயரத்திற்கிடையேயும் சரிசெய்யப்பட்டது.

இது எல்லோராலும் மேற்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாம் பொய் சொல்பவர்களை அவர்களை களை எடுப்பதற்கு முன்பே பிடித்தாக வேண்டும். இது மக்களின் மனதில் வேரூன்ற வேண்டும். ஒரு நிர்வாகியாக நான்தான் இதை வெளிக்கொணர முடியும். ஏனெனில் அதிர்ஷ்டவசமாக நான் ஒரு சாதரண குடிமகனைவிட செய்திகளை பெறும் இடத்தில் உள்ளேன். எனவே நான் இதற்கு பதில் சொல்வதை எனது கடமையாக கருதுகிறேன்.

இல்லையெனில் நாம் பொய் சொல்பவர்களுக்கு இடம் கொடுத்ததுபோல் ஆகிவிடும். அல்லது இது தொடரவோ, அதிகரிக்கவோ வழி வகுத்திடும். இதுபோன்ற ஏழைகளுக்கான அரிசி (இலவச அரிசி) பணத்தை வேறு காரணங்களுக்காக மாற்றப்பார்க்கின்றனர். மக்களுக்கு இந்த உண்மையை சொல்லவில்லை. பின்னால் இவர்களே கவர்னர் அலுவலகம் ஏழைகளுக்கான இலவச அரிசியை கொடுக்க மறுக்கிறார்கள் என்று குறை கூறுவார்கள். மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் ஏன் கவர்னர் கோப்பை திருப்பி அனுப்பினார் என்று கூறியிருக்க வேண்டும்.

ஏழைகளின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த இலவச அரிசிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு ஒரு காரணத்துக்காக மாற்றப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த கவர்னர் மாளிகை செயல்படுகிறது என்று பின் யார்தான் மக்களிடம் கூறுவர்?

எவ்வளவு பொய்யர்கள் ஒரு பொய்யிலிருந்து அடுத்த பொய் சொல்வதற்குள் காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள் என்று நான் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நாம் அவர்களில் சிலரைத்தான் நம்முடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கிறோம். நடந்து கொண்டிருக்கும் சுரண்டல்களிடமிருந்து புதுச்சேரியில் உள்ள பொதுமக்களை பாதுகாக்க அவசரமாக ஒரு உண்மை கண்டறியும் முறை தேவைப்படுகிறது.

ஒருவர் மற்றொருவரை குற்றம் சாட்டும்போது குற்றம் சாட்டப்பட்டவர் பதில் அளிக்கவேண்டும். இது மக்கள் பெருமளவில் உண்மையை அறிந்துகொள்ளவும், புதுச்சேரியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒழுக்க சரிவை சீர்செய்யவும் உதவும். இது ஒரு தொடர்கதையானால் தொழில்நுட்ப தீர்வு ஒன்றுதான் இதற்கு தேவைப்படும். பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு சேவையில் ஈடுபடும்போது பொய்த்தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது.

மக்கள் யார் பொய் சொல்கிறார்கள்? மற்றும் யார் அவர்களை தவறான வழிநடத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் உள்ளூர்வாசிகளா? வெளியூர்வாசிகளா? நான் ஒரு வெளியூர் வாசியாக ஜனாதிபதி என்னை அனுமதிக்கும் வரை நான் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருப்பேன். கவர்னர் எதை செய்தாலும் அது பெரும்பான்மை மக்களின் நலனை கருதி இருக்குமே தவிர ஒரு சிலருக்காக கண்டிப்பாக இருக்காது.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்