பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

புதுவையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-10-30 00:04 GMT

புதுச்சேரி,

 அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரியில் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குபவர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2017–18ம் ஆண்டில் பால் வழங்கிய 7,482 பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடியே 23, லட்சத்து 21 ஆயிரத்து 605 ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு 2017–18ம் ஆண்டில் அவர்கள் அளித்த பாலின் மதிப்பில் லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.20 வரை வித்தியாசத்தொகையாக வழங்கப்படும்.

இதேபோல் புதுவையில் நுகர்வோருக்கு பாண்லே பால் விற்பனை செய்யும் முகவர்களின் நலனில் புதுவை அரசு அக்கறை கொண்டுள்ளது. அவர்களை ஊக்குவிக்கவும், பால் விற்பனை தொழிலில் லாபம் கிடைத்து தொடர்ந்து அந்த தொழிலில் வருவாய் பெறவும் 2017–18ம் ஆண்டில் பால் விற்பனை செய்த 222 முகவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6 லட்சத்து 84 ஆயிரத்து 750 வழங்க உள்ளது.

பால் விற்பனை முகவர்கள் 2017–18ம் ஆண்டில் விற்பனை செய்த பாலின் மதிப்பிற்கு ஏற்ப ரூ.1750 முதல் ரூ.4 ஆயிரம் வரை தீபாவளியை முன்னிட்டு கூப்பனாக வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்