ஏட்டுவை தாக்கிய 4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு

ஏட்டுவை தாக்கிய 4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-10-29 23:28 GMT
வேலூர்,

வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். இவருடன் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த பிராங்கிளின் என்பவரும் உடன் சென்றார். நள்ளிரவு 1.30 மணி அளவில் காகிதப்பட்டறை பகுதியில் சென்றபோது அங்கு வேலப்பாடியை சேர்ந்த சரத் என்ற கோகுல்ராஜ் (வயது 23), அவரது சகோதரர் சரண்ராஜ் (20), கொசப்பேட்டையை சேர்ந்த சத்தியா (20), ஆனந்தன் (23) ஆகியோர் தங்களது காரை சாலையின் நடுவே நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த கார்த்திகேயன் அவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து கார்த்திகேயனை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.குணசேகர் தீர்ப்பு கூறினார். அதில் பணியில் இருந்த போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி தாக்கிய 4 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.3,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். கார்த்திகேயன் தற்போது விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்