திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தந்தை-மகன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தந்தை-மகன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-29 22:56 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலசபாக்கம் அருகே உள்ள வில்வாரணி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சங்கரன் (வயது 65) என்பவர் தனது மனைவி கோவிந்தம்மாள், மகன் கார்த்திகேயன் (30) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் சங்கரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் திடீரென தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த போலீசார் ஓடிச்சென்று மண்எண்ணெய் கேனை பிடுங்கிக்கொண்டு, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் கூறுகையில், ‘நானும் எனது தந்தையும் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்தை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமித்து கொண்டார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் புகார் செய்தால் போலீசார் உரிய விசாரணை நடத்த வில்லை. அதனால் தான் நாங்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்றோம்’ என்றார்.

இதையடுத்து போலீசார் அவர்களை திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்