மணல் திருட்டில் சிக்கும் வாகனங்களை சிறப்பு நீதிமன்றங்கள் தான் விடுவிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மணல் திருட்டில் சிக்கும் வாகனங்களை சிறப்பு நீதிமன்றங்கள் தான் விடுவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-29 22:41 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டியராமன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்றுப்படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“ என கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கிறது. அனுமதியின்றி இரவு பகலாக மணல் திருட்டில் ஈடுபட்டு இயற்கை வளங்களை சூறையாடுவதால் வருங்காலங்களில் இந்தியாவில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உள்ளது என நிதி ஆயோக் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, மணல் திருட்டு வழக்கில், தமிழக உள்துறை செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது. மேலும் மணல் திருட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் மணல் திருட்டின் போது சிக்கும் வாகனங்களுக்கு அபராதம் கட்டிவிட்டு வாகனங்களை எடுத்து செல்கின்றனர். எனவே இனிமேல் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பிடிபட்டால் எந்த வாகனமாக இருந்தாலும் திரும்ப ஒப்படைக்க கூடாது. மாட்டு வண்டியாக இருந்தால், மாடுகளை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டு வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும். வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தால், அவற்றை விடுவிக்க ஆர்வம் காட்டக்கூடாது. இந்த உத்தரவை உள் துறை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தி நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மணல் திருட்டில் பிடிபடும் வாகனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். மணல் திருட்டு தொடர்பான வழக்கின் ஆவணங்களை போலீசார் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் வழங்க வேண்டும். அந்த ஆவணங்களுடன் 2 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். தேவைப்படும் போது சம்பந்தப்பட்ட வாகனங்களை நீதிமன்றம் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் பறிமுதல் செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சிறப்பு நீதிமன்றங்கள் தான் விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்