கலெக்டரிடம் மனு கொடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியல்
கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் பாண்டியன் நகரில் சாலை சீரமைப்பு பணிக்காக ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சீரமைப்பு பணி தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் சாலையில் செல்வோருக்கு காற்றில் பரவும் தூசியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அந்த வழியாக காரில் வந்த கலெக்டரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுக்குமாறு கூறிவிட்டு சென்று விட்டதால் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரசம் செய்தனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தூசியை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.