திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 530 பேர் கைது; சமையல் பணிகள் பாதிப்பு

திருப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 530 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சத்துணவு சமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-29 23:00 GMT

திருப்பூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ஒட்டு மொத்த தொகை ரூ.5 லட்சத்தை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25–ந்தேதி முதல் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கடந்த 4 நாட்களாக அந்த சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தங்கள் கோரிக்கைக்கு அரசு செவிகொடுக்கவில்லை என்றும், உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கூடிய அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் திடீரென பல்லடம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில செயலாளர் சத்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாக்கியம், மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இதன்படி 490 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 530 பேர் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பல்லடம் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்