டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்

டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. உறவினர்கள், மாணவ–மாணவிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2018-10-30 00:15 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி தேவி (43). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20). மகன் வருண்ஸ்ரீ (15).

ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பினார். இதனால் அவருடைய பெற்றோர் ஸ்ரீமதியை டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன் சேர்த்துவிட்டனர். அந்த பயிற்சி மையத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் வாடகைக்கு ஸ்ரீமதி தங்கியிருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கினார்.

இந்த நிலையில் கடந்த 27–ந் தேதி ஸ்ரீமதி தான் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டெல்லி கரோல்பாக் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி, அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தினார்கள்.

ஸ்ரீமதியின் அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தையும் கைப்பற்றி உள்ளனர். அதில், ஸ்ரீமதி, ‘தற்கொலை செய்ய தான் எடுத்த முடிவை குறிப்பிட்டு மன்னிக்கும்படியும், தம்பி வருண்ஸ்ரீயை சந்தோ‌ஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றும் உருக்கமாக எழுதியிருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே தகவல் கிடைத்து கதறி துடித்த ஸ்ரீமதியின் பெற்றோர் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசார் ஸ்ரீமதியின் உடலை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் சொந்த ஊரான ஆலாம்பாளையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது.

அப்போது ஸ்ரீமதியின் உடலை பார்க்க அந்த பகுதி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். மேலும், ஸ்ரீமதியுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த மாணவ–மாணவிகளும் அங்கு குவிந்தனர். அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் உறவினர்கள், மாணவ–மாணவிகள் ஸ்ரீமதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சிய கனவோடு டெல்லிக்கு படிக்கச் சென்ற மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்