ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 984 பேர் கைது

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 984 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-29 23:15 GMT

ஈரோடு,

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவைத்தொகை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கடந்த 25, 26, 27 ஆகிய தேதிகளில் சத்துணவு ஊழியர்கள் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர். எனினும் தமிழக அரசு, சத்துணவு ஊழியர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.

இதனால் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், 29–ந் தேதியில் இருந்து தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான சத்துணவு ஊழியர்கள் ஒன்று திரண்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் வெங்கிடு ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடி தாலுகா அலுவலம் முன்பு உள்ள ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 919 பெண்கள் உள்பட 984 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஈரோடு மாநகராட்சி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்